டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் ஹாக்கியின் காலிறுதிப்போட்டியில் நுழைந்த இந்திய அணி காலிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் அட்டகாசமான ஒரு கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து ஆட்டத்தின் இறுதிவரை பலமுறை கோல் அடிக்க முயன்றும், ஆஸ்திரேலியாவால் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை.
இந்திய அணியின் கோல் கீப்பர் சவீதா புனியா பெனால்டி கார்னர்களை மிக லாவகாம தடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் 1-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தங்கம் வெல்லும் கனவோடு இருந்த ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதிக்குள் நுழைந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, அர்ஜெண்டினா அணியை சந்திக்கிறது.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பதக்கம் வெல்லும் கனவு நனவாகியுள்ளதால் ஹாக்கி ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்ட பலரும் இந்திய அணிக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post