அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் சுமித் நாகல் அமெரிக்க ஓபனில் பிரபல வீரரான ஃபெடரரை எதிர்கொள்ள உள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நாளை தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த 22 வயதான சுமித் நாகல் பிரேசிலைச் சேர்ந்த மெனேசெஸை 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றார். அத்துடன் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருடன் மோதுவதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஃபெடரருக்கு எதிராக விளையாட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக அவரை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுமித் நாகலுடன் மற்றொரு இந்திய வீரரான பிரஜ்னேசும் தொடரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.