கோலாகலமாக தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முன்னனி வீரர்கள் பலர் அடுத்த சுற்றுக்கு தகுதி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால், ரோஜர் ஃபெடரர், மரிய ஷ்ரபோவா, கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கிய நிலையில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான ரஃபேல் நடால் தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டக்வொர்த்தை 6-4, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்று முன்னேறினார்.

உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர் கொண்ட ஸ்விட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர், 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பிரபல பிரிட்டன் வீரரான ஆண்டி முர்ரே, ஸ்பெயினின் ரோபெர்டோவிடம் 4-6, 4-6, 7-6, 7-6 , 2-6 நேர் செட் கணக்கில் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அதேபோல் பெண்கள் பிரிவில், பிரபல ரஷ்ய வீராங்கனையான மரிய ஷரபோவா இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் டார்ட்டை 6-0, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பெல்ஜியத்தின் அலிசன் வேன் உய்ட்வான்க்கை எதிர்கொண்ட டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.

Exit mobile version