கடந்த நிதியாண்டில் நாடெங்கும் மோசடிகளால் வங்கிகள் இழந்த பணம் 27 ஆயிரம் கோடி என்று மத்திய பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்…
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஆய்வு அமைப்புகளில் ஒன்றான மத்திய பொருளாதார நுண்ணறிவுப் பிரிவானது கடந்த 2018-19 நிதியாண்டிற்கான தனது அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிக்கையின் மூலம் கடந்த நிதியாண்டின் நாடெங்கும் நடந்த 222 பண மோசடிகளால், வங்கிகள் 27 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யுனைடட் கமர்சியல் வங்கி ஆகிய வங்கிகளில்தான் இவற்றில் பெரும்பாலான மோசடிகள் நடந்துள்ளன.
வங்கி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அயல்நாடுகளுக்குச் சென்றால் கூட, அவர்களின் சொத்துகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சமீப காலமாக இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு கூட வங்கிகளில் கடன்வாங்கிவிட்டு கட்டாமல் இருந்த நிறுவனங்கள் மீது ஒரு நாடு தழுவிய ரெய்டை சி.பி.ஐ. நடத்தியது, அப்போது 16 கம்பெனிகள் பிடிபட்டன, அவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இவர்கள் சுருட்டிய தொகை மட்டுமே 1139 கோடியாக இருந்தது.
இந்த சூழலில் மத்திய பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் ஆண்டறிக்கையானது கூடுதல் முக்கியத்துவம் பெருகிறது. 222 மோசடிகளில் ஈடுபட்டு 27 ஆயிரம் கோடி சுருட்டிய இந்த மோசடியாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மோசடி செய்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.