2-வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி, இந்திய அணி தொடரை கைப்பற்றியது

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது இருபது ஓவர் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பிராத்வொயிட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் தந்தனர். தவான் 23 ரன்னில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா 67 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து கோலி 28 ரன்னிலும், பண்ட் 4 ரன்னிலும், மனீஷ் பாண்டே 6 ரன்னிலும் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 167 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் முதல் போட்டியை போன்ற இந்த போட்டியிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய ரோவ்மன் போவல் 54 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

போட்டி 15.3 ஓவர்களை எட்டிய போது மழையின் குறுக்கீடு கரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ப்ரோவிடன்ஸில் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Exit mobile version