முதல் டி20 போட்டி: இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பிராத்வொயிட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜான் கேம்ப்பெல் இவின் லீவிஸ் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய கிரன் பொல்லார்ட் மட்டும் நிலைத்து நின்று ஆடி 4 சிக்சர்கள் உள்பட 49 ரன்கள் எடுத்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 1 ரன்னிலும் ரோஹித் ஷர்மா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி மற்றும் மனீஷ் பாண்டே தலா 19 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தனர். 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 98 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

Exit mobile version