நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது போட்டி சமனில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவர் முறையில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளையும் வென்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் நகரில் இன்று மோதின. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வானவேடிக்கை நடத்திய ரோகித் சர்மா, 65 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சிறப்பாக ஆடிவந்த ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, முன்னதாகவே களமிறக்கப்பட்ட துபே, 3 ரன்களில் ஏமாற்றினார்.
மறுபுறம் சிறப்பாக ஆடிய அணித் தலைவர் கோலி, 38 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் அய்யர் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, மனிஷ் பாண்டே 14 ரன்களுடனும், ஜடேஜா 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்டின் குப்தில் 31 ரன்களிலும், காலின் முன்ரோ 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய சாண்ட்னர், கிராண்ட்ஹோம், டெய்லர் உள்ளிட்ட வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி தடுமாறியது. கேப்டன் கனே வில்லியம்சன் மட்டும் அதிரடினார். அவர் 48 பந்தில் 95 குவித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 179 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, யாக்கர் மன்னன் பும்ரா வீசிய 6 பந்தில் 17 எடுத்தது. இதைத் தொடர்ந்து, 18 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அப்போது, பேட்டிங் முனையில் இருந்த துணை கேப்டன் ரோகித் சர்மா 2 பந்துகளையும் சிக்சருக்கு பறக்க விட்டு, அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது.
Discussion about this post