இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 321 ரன்களை குவித்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் 205-வது போட்டியான இதில், அபாரமாக ஆடி 157 ரன்களை குவித்து, ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கனை கடந்து கோலி புதிய சாதனை படைத்தார். மேலும், 37 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த 2 வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில், நர்ஸ் மற்றும் மெக்காய் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 322 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹோப், அதிரடியாக விளையாடி 123 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி பந்தில் ஹோப் அடித்த நான்கு ரன்கள் மூலம், சம நிலையையே எட்ட முடிந்தது.
இறுதியாக, அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களுடன் ஆட்டத்தை முடித்தது. இதனால் போட்டி, சமனில் முடிந்தது. இந்திய தரப்பில், அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில், இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.