இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான, மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ளது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பெங்களூருவில் 3-வது போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் வார்னர், 3 ரன்கள் எடுத்த நிலையில், ஷமியின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், மற்றொரு துவக்க ஆட்டக்காரான அணித் தலைவர் ஃபிஞ்ச், 19 ரன்களில் ரன் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய, ஸ்மித் மற்றும் லபுஷேன், சிறப்பாக ஆடி, அரை சதத்தை கடந்த நிலையில், லபுஷேன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டார்க், ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, ஸ்மித் உடன் இணைந்த அலெக்ஸ் கேரி 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டர்னர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி சதத்தை கடந்த ஸ்மித், 131 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், இதைத் தொடர்ந்து ஸாம்ப்பா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முடிவில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து, 286 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், சைனி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 287 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் நிதானமாக ஆடி வந்த நிலையில், 19 ரன்கள் எடுத்திருந்த போது, ராகுல் ஆட்டமிழந்தார். இதை அடுத்து வேகத்தை அதிகப்படுத்திய ரோகித் சர்மா தனது சதத்தை பூர்த்தி செய்த நிலையில், 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது, ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுத்த 28-வது சதமாகும்.
மறுபுறம், கேப்டன் விராட் கோலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில், 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர், ஆட்டமிழக்காமல் 44 ரன்களை எடுத்து, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். அவருடன், மனீஷ் பாண்டே 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், 47.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Discussion about this post