தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி – ரோகித் சர்மா சதம்!

நியூசிலாந்து அணியினர் ஒருநாள் போட்டித் தொடருக்காக இந்திய வந்துள்ள நிலையில் நேற்று இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் டாஸை வென்ற நியூசிலாந்து அணியினர் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்கள். அதன்படி இந்திய அணியின் கேப்டனும் ஓபனிங் பேட்ஸ்மேனுமான ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஜோடி முதலில் களமிறங்கியது. இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

சிறப்பாக முதல் பார்ட்னர்சிப்பினைத் தொடங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஜோடி  முதல் விக்கெட் பார்ட்னர்சிப்பாக 212 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு சதம் அடித்து தனது ஃபார்மை மீட்டுள்ளார். அவர் மிட்செல் ப்ரேஸ்வெல் பந்து வீச்சில் போல்ட் ஆனார். பிறகு களமிறங்கிய கோலியுடன் கில் ஜோடி சேர்ந்தார். கில் அதிரடியாக விளையாடி தன்னுடைய சதத்தினைப் பூர்த்தி செய்தார். அவர் 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்னர் பந்தில் கான்வாயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கோலி 26, இஷான் கிஷான் 17, சூர்யகுமார் 14 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டி 54 ரன்கள் சேர்த்தார். ஷர்துல் தாக்கூர் ஒரு சிறிய கேமியோ போன்று ஆடி 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பாக டஃபி மற்றும் டிக்னர் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் சேர்த்தனர்.

பிறகு 386 என்ற இலக்கினை நோக்கி முன்னேறிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆலன் எந்த ரன்னும் எடுக்காமல் ஹர்திக் பாணிடியா ஓவரின் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். பிறகு களமிறங்கிய நிக்கோல்ஸ் கான்வாயுடன் ஜோடி சேர்ந்து ரன்கள் சேகரிக்க ஆரம்பித்தார். டேவான் கான்வாய் அதிரடியாக விளையாடி 138 ரன்கள் சேர்த்தார். அவர் உம்ரான் மாலிக் பந்து வீச்சில் கேப்டன் ரொகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு வந்த யாருமே அதிகமாக ரன்கள் ஏதும் எடுக்காமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆட்டமுடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணியால் எடுக்க முடிந்தது. திறமையாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை எடுத்ததோடு மட்டும் இல்லாமல் ஆட்டநாயகனாகவும் தேர்வானார். இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளையுமே இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது. தொடர் நாயகன் விருது சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டது.

Exit mobile version