3-வது டெஸ்ட்: ரோகித் சர்மா, ரகானே அபார ஆட்டம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்த நிலையில், மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர், 3 டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இருபது ஓவர் தொடர் சமனில் முடிந்தது. அடுத்து தொடங்கிய டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நேற்று துவங்கியது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால்,10 ரன்னிலும், இதனையடுத்து களம் இறங்கிய புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும் ரபடா பந்து வீச்சில், அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் கோலி 12 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்ததுடன் நடப்பு தொடரில் 3-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் ரகானே அரைசதம் கடந்தார். இந்நிலையில், சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, ரகானே இணை 4-வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியா 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் தடைபட்டது. தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டது. அப்போது ரோகித் சர்மா 117 ரன்களுடனும், ரகானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Exit mobile version