இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியினருக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியானது இந்தியா அணியைப் பொறுத்தவரை பெருத்த அடிதான். இந்தியா இவ்வளவு குறைவான ரன்களில் ஆட்டமிழந்திருப்பது இரசிகர்கள் இடையே பெரிய அளவிற்கு சோதனையை ஏற்படுத்தியது. இதில் சில நெட்டிசன்கள் பார்மில் இல்லாத அயல் நாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தாலே பார்மை மீட்டெடுத்துவிடுகிறார்கள் என்று கேலி செய்யும் பொருட்டு பல மீம்களை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் ஸ்டார்க் குறித்துதான் பேசிவருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆட்டங்களிலும் மிட்செல் ஸ்டார்க் திறமையாக செயல்பட்டுவருகிறார். முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளும், இரண்டாவது போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்து ப்ளேயர் ஆப் த மேட்ச் விருதும் வாங்கினார். ரோகித், கோலி போன்ற ஜாம்பவான் ப்ளேயர்களின் விக்கெட்டுகளை அனாயசமாக எடுத்து தனது பழைய பார்மை மீட்டெடுத்துள்ளார். சரி இந்திய அணி சறுக்கிய இடம் என்ன என்று இனி பார்க்கலாம்.
கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதுபோல, பேட்டிங் நேற்றைய ஆட்டத்தில் சற்று சரிவை நோக்கிதான் சென்றுள்ளது. கேப்டன் ரோகித், சுப்மன் கில், சூர்யகுமார் போன்ற முதல் நிலை பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறிவிட்டார்கள். ஆனால் விராட் கோலி மட்டுமே சற்று பொறுமையாக ஆடி 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் மட்டும் இறுதி வரை நின்று சில சிக்சர்களை பறக்கவிட்டார். ஆனால் அவருக்கு யாரும் உறுதுணையாக நிற்கவில்லை. இதனால் 116 ரன்களில் இந்திய அணி சுருண்டது. விசாகப்பட்டினத்தில் இந்தப்போட்டியானது நடைபெற்றது. போட்டியின் முன்பு இது பேட்டிங்கிற்கான பிட்ச் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக இந்திய அணி விளையாடியது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அமைந்தது. முக்கியமாக மிட்செல் மார்ஸ் வெறிகொண்டு ஆடினார். 36 பந்துகளில் 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடித்து 66 ரன்கள் குவித்தார். விரைவிலேயே ஸ்கோரை எட்ட இது உதவியாய் இருந்தது.
அப்படிப் பார்க்கையில் இந்திய அணியின் பேட்டிங்குதான் இங்கு பிரச்சினை என்று கருதவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக நின்று நிலைத்து ஆடக்கூடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவைப்படுகிறார்கள். அதனை மட்டும் கடந்த ஆட்டத்தில் செய்திருந்தால் ஒரு நாகரீகமான ரன்களை இந்திய அணி எட்டியிருக்கும். ரோகித் சர்மா தலைமையில் எதிரணியானது பூஜ்ஜிய விக்கெட்டிற்கு ஜெயிப்பது இது மூன்றாவது முறையாகும். அடுத்தப் போட்டியில் யார் வெல்வார்களோ அவர்களுக்கே கோப்பையை வெல்ல வாய்ப்பானது அளிக்கப்படும். சென்னை சேப்பாக்கத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நடைபெற இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்..!