கிருஷ்ணகிரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குழாய் பொருத்திய பானைகள் மற்றும் மண் குவளைகள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.
தமிழகத்தின் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தாண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். இதிலிருந்து தப்பிக்க இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர் உள்ளிட்டவற்றை அருந்தி வருகின்றனர்.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், கிருஷ்ணகிரியில் கம்மங்கூழ், ஜிகிர்தண்டா, மோர் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. தள்ளு வண்டி வியாபாரிகள் கம்மங்கூழ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகி வருகின்றனர்.
ஒரு குவளை மோர் 5 ரூபாய்க்கும், ஜிகிர்தண்டா 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடிநீரை இயற்கையான முறையில் குளிர்ந்த நீராக மாற்றும் மண்பானைகள் காலத்திற்கு ஏற்றாற்போல குழாய் பதித்து விற்கப்பட்டு வரும் நிலையில், இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.