பீகாரில் மூளைக் காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த காய்ச்சலுக்கு லிச்சி பழங்களே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
பீகாரின் முசாபர்பூர் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. மூளைக்காய்ச்சலில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 93 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 19 குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உயிரிழந்துள்ளன. இந்நிலையில், முசாபர்பூரில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் மேலும் சிகிச்சை பெற்றுவரும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள், தீவிர பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த காய்ச்சலுக்கு மாநிலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் லிச்சி பழங்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு, ஆய்வகத்தில் அந்த பழங்களை ஆய்வுக்கு உட்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், இணையமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோர் மீது, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Discussion about this post