காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று 37 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தற்போது 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 120.21 அடியாக உள்ளது. நீர் இருப்பானது 93.470 டி.எம்.சியிலிருந்து அதிகரித்து 93.806 டி.எம்.சியாக உள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனகல்லில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. எனவே, அருவியில் 49-வது நாளாக குளிக்கவும், 21-வது நாளாக பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.