சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் மின்சார துறை மற்றும் மதுவிலக்கு, ஆய்த்தீர்வு துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் மூன்று வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மார்க் மூலம் பல நூறு கோடி ரூபாய்யை அமைச்சர் செந்தில் பாலாஜி சுருட்டியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை கிண்டியில் மாபெரும் பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தமிழக முழுவதும் முறைகேடாக பல ஆயிரம் மதுபானக்கூடங்கள் இயங்குவதாகவும், இதன் மூலம் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தை அப்படே எடுத்து கொள்வதாகவும், அரசுக்கு கலால் வரியாக செலுத்தாமல் அப்படியே செந்தில் பாலாஜி மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்களுக்கு சென்று விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 40-க்கும் அதிகமான இடங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான உறவினர்கள், நெருக்கமான காண்ட்ராக்டர்கள் இல்லங்களில், அலுவலகங்களில் எட்டு நாட்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், பெட்டி பெட்டியாக hard disk, பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி சென்றனர். இது குறித்து விசாரணை நடத்தியதை தொடர்ந்து தற்போது அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியினுடைய இல்லத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலை இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதே போல் அவரது தம்பி அசோக் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனையை நடத்தி வருகின்றனர்.