வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, 2007-2008 மற்றும் 2008-2009 ஆகிய நிதியாண்டுகளுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டுமெனவும், வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, தீர்ப்பாயத்தில் நடிகர் சூர்யா தாக்கல் செய்த முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, வருமான வரித்துறையின் உத்தரவை உறுதி செய்தது. வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது, நடிகர் சூர்யா கால தாமதமாக தமது கணக்கை தாக்கல் செய்ததாகவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வில்லை எனவும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வருமானம் குறித்த முழு விவரங்களை நடிகர் சூர்யா அளிக்காததால், அவருக்கு வட்டி விலக்கு அளிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Discussion about this post