திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்காக 26 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக 26 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதில் அறைகளுக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அறைகளை பெற்றுச் செல்கின்றனர். அதேபோல் காத்திருப்பு வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் நீர் மோர் சிற்றுணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தானம் ஊழியர்கள் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 92 ஆயிரத்து 184 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், நேற்று எண்ணப்பட்ட உண்டியல் வருமானம் 2 கோடியே 56 லட்சம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post