தமிழகத்தில் கோடை காலத்தின்போது மின் வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடைக்காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் தேர்தல் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள் என்று விளக்கமளித்தார்.
முன்னதாக, சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்பதன் அவசியம், பெண் குழந்தை கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த வாகனம் நாமக்கல் மாவட்டத்தில் 10 நாள்களுக்கு கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
Discussion about this post