சேலம் அருகே காதல் விவகாரத்தில் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்ணின் தந்தையையும், தாயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செங்கான்வளவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதான தங்கவேலு, கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெயர் சின்னம்மா. இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூத்த மகன் 30 வயதான பெரியண்ணன், இரண்டாவது மகன் 25 வயதான பிரகாஷ்.
தங்கவேலின் மகன் பிரகாஷுக்கும், காரைக்காடு பகுதியை சேர்ந்த செல்வம் – செல்வி தம்பதி மகள் சந்தியா சந்தியாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
கடந்த மாதம் 13-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தந்தை செல்வம், கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சந்தியாவை தேடிய போலீஸார், அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சில நாட்களிலேயே சந்தியா மீண்டும் பிரகாஷுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
ஆத்திரம் அடைந்த சந்தியாவின் பெற்றோர், 11 பேர் கொண்ட கும்பல் உடன் பிரகாஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பிரகாஷின் தந்தை தங்கவேலுவிடம் தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கவேலுவின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பினார்.
ஆபத்தான நிலையில் இருந்த தங்கவேலுவை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர், இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தங்கவேல் கொலை வழக்கு தொடர்பாக செல்வம், அவரது மனைவி செல்வி ஆகியோரை கைது செய்து தப்பியோடிய மற்ற குற்றவளிகளை தேடி வருகின்றனர்.
Discussion about this post