பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ள முரசொலி அலுவலகக் கட்டட விவகாரம், தி.மு.க-வின் பல தில்லுமுல்லுகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், இந்தத் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி உள்ளது. அதுபற்றிய ஒரு புலனாய்வுச் செய்தி தொகுப்பு…
தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி. இந்த நாளேடு, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகக் கட்டடத்தில் அச்சாகிறது. இந்த அலுவலகம், பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்தார். அதை மறுத்த மு.க.ஸ்டாலின், முரசொலி அலுவலகத்தின் பட்டாவை வெளியிட்டு, ராமதாஸ் அரசியலில் இருந்து விலகத் தயாரா? என வாய்ச் சவடால் அடித்தார். அதற்கு தக்கப் பதிலடி கொடுத்த ராமதாஸ், பட்டா தேவையில்லை, முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரம் எங்கே? என்று கேட்டு மு.க.ஸ்டாலினின் வாயை அடைத்தார். அதில் நிதானமிழந்த மு.க.ஸ்டாலின், மூலபத்திரம் எல்லாம் எங்களிடம் இல்லை, நாங்கள் நேர்மையாகத்தான் முரசொலி அலுவலக நிலத்தை வாங்கினோம் என்று அரைகுறையாக உளறினார்.
இதற்கிடையில், முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகச் சொல்லி, டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், மு.க.ஸ்டாலினுக்குச் சம்மன் அனுப்பியது. அதில் மேலும் குழம்பிப்போன ஸ்டாலின், நேரில் ஆஜராக விலக்குக் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அதற்கு ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், முரசொலி வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்படியானால், அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் யார்? யாரோ ஒருவரின் கட்டடத்துக்கு மு.க.ஸ்டாலின் ஏன் வரிந்து கட்டி பட்டாவை வெளியிட வேண்டும்… வழக்கைச் சந்திக்க வேண்டும்… வாய்தா கேட்க வேண்டும்… என்று ராமதாஸ், ஸ்டாலினை அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
இதில் உண்மை என்னவென்றால், முரசொலி நாளேட்டை அச்சடிப்பது அஞ்சுகம் பதிப்பகம். அந்த அஞ்சுகம் பதிப்பகத்தின் 50 சதவிகிதப் பங்குகள் மு.க.ஸ்டாலினின் தயார், தயாளு அம்மாளிடம் இருக்கிறது. அந்த அஞ்சுகம் பதிப்பகம் முரசொலி அலுவலகத்தில் இயங்குகிறது. அந்த அலுவலகம், தி.மு.க-விற்குச் சொந்தமானது. ஆனால், அலுவலகத்துக்கான வாடகையை, அஞ்சுகம் பதிப்பகம் கட்டவில்லை. அதாவது, 50 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் வாடகை கட்டவில்லை. மாறாக, கடைக்கோடி தொண்டன் கைக்காசில் 6 ஆயிரம் கோடிகளை குவித்து வைத்துள்ள, முரசொலி அறக்கட்டளை கட்டுகிறது. அந்த முரசொலி அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பு மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. ஏகமொத்தமாக, முரசொலி நாளிதழ், அதை அச்சடிக்கும் அஞ்சுகம் பதிப்பகம், அந்த பதிப்பகம் செயல்படும் முரசொலி அலுவலகக் கட்டிடம், அந்தக் கட்டடத்துக்கு வாடகை கொடுக்கும் முரசொலி அறக்கட்டளை என எல்லாமே கருணாநிதியின் குடும்பத்திடமே உள்ளது. இதில் இருந்து தெரியவருவது என்னவென்றால், பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்தது தி.மு.க அல்ல… முழுக்க முழுக்க மு.க-வின் குடும்பம்தான் என்பது தெளிவாகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
Discussion about this post