காரைக்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று, கோவில்களை தரிசித்து, கின்னஸ் சாதனை படைக்கும் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கே.வேலங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டிதுரை, கார்த்திகேயன் சகோதரர்கள் கின்னஸ் சாதனை செய்வதற்காக புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, 13 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 501 கோயில்களைத் தரிசிக்க திட்டமிட்டு, இதற்கென பிரத்யோகமாக தங்களது காரில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, பயணத்தை தொடங்கினர். இந்த சகோதரர்கள் சுமார் 30 லிருந்து 40 நாட்கள் வரை பயணம் செய்து இளைஞர்களிடம் ஆன்மீக சிந்தனைகளை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக கின்னஸ் சாதனைக்கான முயற்சியையும் இதை மேற்கொள்ளவுள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 22 மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த சாதனை பயணத்தை, மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ரோஹித் நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.