அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்களை நியமிக்க உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகள் சரிசமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை , தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி காலி கலிஃப் உல்லா தலைமையில் 3 பேர் அடங்கிய மத்தியஸ்தர்கள் குழுவை அமைத்து உத்தரவிட்டது. ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் , ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஃபைசாபாத் நகரில் அலுவலகம் அமைத்து, ஒருவாரத்திற்குள் சமரச பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் 8 வாரங்களுக்கு பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நீதிமன்ற அமர்வு, சமரச பேச்சுவார்த்தைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் நீதிமன்ற உதவிகளை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளது. மத்தியஸ்தர்கள் குழுவிற்கான செலவுகளை உத்தரப் பிரதேச அரசு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு சமரச பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை ஊடகங்களிடம் தெரிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version