புவனகிரி அருகே வெய்யலூர் கிராமத்தில் இயற்கை முறையில் கத்திரிக்காய் சாகுபடி செய்துவரும் விவசாயி அதன் மூலம் அதிக லாபம் பெற்று வருகிறார்….
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது வெய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.
விவசாயியான இவர் தனக்கு சொந்தமான வயலில் இயற்கை முறையில் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் நெல்,கரும்பு ஆகியவற்றை பயிர் செய்து வந்த இவருக்கு, அதன் மூலம்
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால், மாற்றுப்பயிர் செய்ய முயற்சிக்கலாமே என்று யோசித்து தமிழக அரசின் வேளாண்மைத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து அவர்களின் பரிந்துரையின் படி
எளிதில் வளரக்கூடிய சாமந்திபூக்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து ஓரளவிற்கு லாபம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இதே போல காய்கறி சாகுபடி செய்யும் முயற்சியோடு கத்திரிக் கன்றுகளை
ஓசூரிலிருந்து வரவழைத்து, அதனை மாட்டு சாணத்தால் ஆன இயற்கை உரத்தை பயன்படுத்தி பயிரிட்டுள்ளார்.
இதனால், கத்திரி செடிகள் நன்றாக செழித்து வளர்ந்து நிறைய அளவில் காய்கள் காய்க்கவும்
ஆரம்பித்தது.
இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்ற கத்திரிக்காய் என்பதால் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்களும், வியாபாரிகள் பலரும் விரும்பி வந்து வாங்கிச்செல்கின்றனர்.
இதுபற்றி பேசிய விவசாயி ராஜேந்திரன், தனது நிலத்திலிருந்து வாரம் இருமுறை கத்திரி அறுவடை செய்து வருவதாகவும், இதன் மூலம் அனைத்து செலவுகளும் போக வாரத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், கத்திரிக்காய் சாகுபடி மூலம் தோராயமாக ஆண்டுக்கு இரண்டரை லட்சரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
காய்கறிகளில் கத்திரிக்காய்க்கு எப்போதும் அதிக தேவை இருப்பதால், இது எல்லாத்தரப்பு மக்காளாலும் விரும்பி வாங்கக்கூடியதாகவும் இதனால் உடனடியாக விற்பனையும் ஆகிவிடுவதாகக் கூறுகிறார் இயற்கை விவசாயி ராஜேந்திரன்.
Discussion about this post