சுதந்திர போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவருமான, தியாகி இம்மானுவேல் சேகரனார், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் என்றும், ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்றும், பெருமிதத்துடன் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-ஆவது நினைவு நாள் வருகிற 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக பொதுச்செயலாளர் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்துள்ளார்.இதே போல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிறைகுளத்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகர், முத்தையா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனாருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கழக பொதுக்செயலாளர் தனது அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.