பொய் பேசுவதில் டாக்டர் பட்டம் கொடுத்தால் ஸ்டாலினுக்கு கொடுக்கலாம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். குளக்கரை பகுதியில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள அடுக்கடுக்கான மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
அதிமுகவில் பிளவு ஏற்படுத்தவும், ஆட்சியை கலைக்கவும் ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்ததால், அரசின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை பரப்பி வருகிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், பொது மக்கள் வசதிக்காக நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ((திருச்செங்கோட்டில் இருந்து ஓமலூர் வரை, திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு வரை நான்கு வழிச்சாலை என, சாலை விரிவாக்கப் பணிகளால் அதிகம் நன்மை பெற்ற சட்டமன்ற தொகுதி திருச்செங்கோடு என, முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, குமாரபாளையத்தில், மகளிர் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், பெண் சிசுக்கொலையை ஒழிக்க தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வில், அதிமுக அரசு முன்னேற்றம் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post