திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோவில் குளத்தைக் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் தூர்வாரியபோது, 50 கிலோ எடையுள்ள சிவன், பார்வதி மற்றும் அருணகிரிநாதர் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லால்குடி அருகே செம்பரையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குளம் நெடுங்காலமாகத் தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த குளத்தைக் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பொக்லைன் மூலம் தூர்வாரிக் கொண்டிருந்தனர். அப்போது 4 அடி ஆழத்தில் சுமார் 50 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை கிடைத்தது. சிவன், பார்வதி, அருணகிரிநாதர் ஆகியோரின் உருவம் கொண்ட அந்த சிலை 2 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்டது. இந்த ஐம்பொன் சிலை சுமார் 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்துத் தகவல் கிடைத்ததை அடுத்து வருவாய்த் துறையினர் சிலையைக் கைப்பற்றி லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர். திருச்சியில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலையை ஒப்படைக்க உள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
Discussion about this post