பெரும்பாலும் கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவே இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், 3 புதிய விதிமுறைகளை அமல்படுத்துகிறது ஐசிசி.
அதன்படி, சந்தேகத்திற்கு இடமளிக்கும் கேட்ச், ரன்-அவுட் போன்றவற்றில் கள நடுவர்கள், மூன்றாவது அம்பயர் அல்லது டிவி அம்பயருக்கு ஏதாவது பரிந்துரைக்கும் போது, இனி தங்களுடைய முடிவு இதுதான் என சாஃப்ட் சிக்னல் வழங்க வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், மூன்றாவது நடுவர் தனது முடிவை சுதந்திரமாக எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஃப்ரீ ஹிட்டில் ஸ்டம்பில் பட்டு பந்து சென்றால், அதில் எடுக்கப்படும் ரன்கள் இனி பேட்ஸ்மேன் கணக்கிலேயே சேர்க்கப்படும். கடந்த டி20 உலகக்கோப்பையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முகமது நவாஸ் வீசிய ஃப்ரீ ஹிட் பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். அந்த பந்து ஸ்டம்பில் பட்டபோதும், ஓடியே 3 ரன்கள் எடுக்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தனர். இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்கும் வகையில் ஃப்ரீ ஹிட் முறையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதைத் தவிர, வீரர்களுக்கு காயம் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் மூன்றாவது விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது பேட்ஸ்மேனும், ஸ்டம்புக்கு அருகில் நிற்கும் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுக்கு அருகில் நிற்க வைக்கப்படும் பீல்டர்களும் ஹெல்மட்டை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.