சபரிமலை கோவிலில் 17-ம் தேதி தரிசனம் செய்ய போவதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டுமெனவும் பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் போகலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சபரிமலை பரபரப்பின் மையமாக மாறிவிட்டது. சபரிமலை கோவிலுக்கு செல்ல 594 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே தீர்ப்பை மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17-ம் தேதி சபரிமலை திறக்கப்பட உள்ளது. பிரச்சினையை சமாளிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் இன்று கூட்டியுள்ளார்.
இதற்கிடையே கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த பெண்ணியவாதி த்ருப்தி தேசாய், வரும் 17-ம் தேதி சபரிமலைக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார். தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.