வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கவே வைக்கப்பட்டிருந்தது பூஞ்சோலை சினிவாசனின் ஒப்புதல் மூலம் தெரியவந்ததுள்ளது.
வேலூரில் துரைமுருகனின் ஆதரவாளர் பூஞ்சோலை சினிவாசன் மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ரத்து தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், சோதனை தொடர்பாக வருமான வரித்துறை இயக்குநரின் அறிக்கை தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், கைப்பற்றப்பட்ட பணம் ரியல் எஸ்டெர் தொழில் மூலமாக தான் ஈட்டியதாக குறிப்பிட்டுள்ள பூஞ்சோலை சினிவாசன், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யவே பணத்தை தயாராக வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், இந்த பணம் வேலூரில் உள்ள கனரா வங்கியில் இருந்து பெறப்பட்டதாகும். இது தொடர்பாக கனரா வங்கியின் மூத்த மேலாளர் தயாநிதி வருமான வரித்துறையிடன் அளித்த தகவலில், 3 முதல் 4 தவணைகளாக இந்த பணம் பூஞ்சோலை சீனிவாசனிடம் வழங்கப்பட்டது என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம், வாக்காளர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய திமுகவினர் திட்டமிட்டிருந்தது உறுதியாகியுள்ளது.