தன்னுடைய கர்பிணி மனைவியை உற்றுப்பார்த்ததால், பழிவாங்கும் நோக்கில் 4 இருசக்கர வாகனங்களை எரித்ததாக, கைது செய்யப்பட்ட ரவுடி வாக்குமூலம் கொடுத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த முருகாம்பேடு அருள்நகர் பகுதியை சேர்ந்தவர் ஒலைமணி. இவர் வேலைக்கு செல்லாமல், அதே பகுதியில் கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு ஊரை சுற்றிவருவது வழக்கம்.
இவர், கடந்த 13-ம் தேதி விடியற்காலை 4.30 மணி அளவில், வழக்கம் போல் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, அருள்நகர் பகுதியை சுற்றிவந்துள்ளார். அப்போது, மோகன் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்திவிட்டு, அங்கிருந்து நண்பர்களுடன் தப்பிச் சென்றுள்ளார். ஓடும் வழியில், அங்கிருந்து ஒரு காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், அங்கு விரைந்த அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சையத் முபாரக், விசாரணை மேற்கொண்டார். அதில், பைக் எரிப்பு சம்பவத்தில் மூல காரணமாக இருந்தது ஒலைமணியும், அவனது நண்பர்களும்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், தன்னுடைய நண்பர்களான யுவராஜ், பரத், வீரா, அஜிஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து பைக்கை எரித்ததாக ஒலைமணி தெரிவித்துள்ளார். மேலும், ஒலைமணியின் கர்பிணி மனைவியை, எதிர்வீட்டு மோகன் அடிக்கடி உற்றுப் பார்த்ததால், அவரை பழிவாங்கும் நோக்கில், அவர் வீட்டின் முன் இருந்த 4 இருசக்கர வாகனங்களை தீயிட்டு எரித்தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஓலைமணி, யுவராஜ் ஆகியோருக்கு, பல கஞ்சா வழக்குகளில் தொடர்பு இருப்பதால், இருவரையும் குண்டர் தடுப்புக் காவலுக்கு மாற்ற காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.