தமிழக வனத்துறையில் பணியாற்றி வரும் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டதை அடுத்து, வேட்டை தடுப்புக்காவலர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையை தடுக்க கிராமப்புற இளைஞர்களை தமிழக அரசு தொகுப்பூதிய அடிப்படையில் வேட்டைத்தடுப்பு காவலர்களாக நியமித்தது. வனவிலங்குகள் வேட்டையை தடுப்பதோடு மட்டுமின்றி வனப்பகுதியை பாதுகாப்பதும், பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தமிழகம் முழுவதும் 1,119 வேட்டைத்தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், மாதாந்திர தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை, 2,500 ரூபாய் அதிகரித்து 12,500 ரூபாயாக வழங்கப்படும் அறிவித்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தமிழக முதலமைச்சருக்கும் வனத்துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.