கேரளாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து, 40 ஆண்டு கால வரலாற்றை முதலமைச்சர் பினராயி விஜயன் மாற்றி எழுதியுள்ளார். அவர் மீண்டும் ஆட்சி அமைத்தது எப்படி? என்பதை விரிவாகப் பார்ப்போம்
உரப்பாணு எல்டிஎப் ((எல்டிஎப்தான் உறுதி)) இந்த வார்த்தை, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தேர்தல் முழக்கம். இந்தத் தேர்தல் முழக்கத்தை முழங்கிய முதலமைச்சர் பினராயி விஜயன், கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சீட் கொடுக்காமல், இளம் வேட்பாளர்களை களமிறக்கினார். கேரளாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுவார்கள் என்ற 40 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி அமைப்புகள், களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளைச் செய்ததும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்ததும் மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. இதற்கு சாட்சியாக சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதே நிலை சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து முதலமைச்சர் பினராயி விஜயன் மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.