சமீபத்தில் பொதுமக்களிடையே அதிக பேசுபொருளாக இருக்கும் விடயம் யாதெனில் துருக்கி நிலநடுக்கம்தான். அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தால் இறந்துள்ளனர். இது மிகப்பெரிய அதிர்வலையை உலக அளவில் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலநடுக்கம் ஏன் வருகிறது? எதனால் நிகழ்கிறது?
புவிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தினால் தளத்தட்டுகள் நகர்கின்றன. இந்த தளத்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அதிர்வுதான் நிலநடுக்கம் அல்லது பூகம்பம். இந்த அதிர்வினை ரிக்டர் அளவுகோல் மூலம் அளவிடுகிறார்கள். ரிக்டரில் நிலநடுக்கத்தின் அளவு 3 ரிக்டர் வரை இருந்தால் நம்மால் பூகம்பத்தினை உணர முடியாது. ஆனால் 7 ரிக்டருக்கு மேல் ஏற்பட்டால் ஆபத்துதான். தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்தின் அளவு 7.8 ரிக்டர் அளவு. மேலும் இரண்டாவது நிலநடுக்கத்தின் அளவு 7.5 ரிக்டர் பதிவாகியது. ஆகவே துருக்கி நாட்டிற்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ஏன் சிரியா, சைப்ரஸ், லெபனான் போன்ற நாடுகளை பாதித்தது என்றால் இந்த நாடுகள் எல்லாம் ஒரெ கண்டத்திட்டு அமைப்புகளில் இடம்பெறக்கூடியது. உதாரணத்திற்கு சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை டெல்லிவாசிகள் உணர்ந்துள்ளனர். காரணம் இரு பகுதிகளின் கண்டத்திட்டும் அருகாமையில் உள்ளன.
புவியினுடைய லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. இந்த தட்டுகள் பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான திடமான பாறைகள் ஆகும். டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது நிலநடுக்கத்தினை விளைவிக்கும். இதுவே கடலின் அடித்தளத்தில் நடைபெற்றால் சுனாமி உருவாகும். நிலப்பரப்பில் ஏற்பட்டால் கட்டிடங்கள், வீடுகள், சாலைகள் போன்றவை மிகவும் மோசமாக சேதமடையும்.
Discussion about this post