பட்ஜெட் எப்படி உருவாகிறது?

ஒரு நாடு தன்னுடைய பொருளாதாரத் தரத்தினையும் அத்தரத்தினை வைத்து ஒரு வருடத்திற்கு செயல்படுத்தக்கூடிய திட்டங்களையும் கணக்குப் போட்டு வைக்கும். இதனை நமது வீட்டில் நாம் செய்துகொள்ளும் பட்ஜெட் போன்று கற்பனை செய்துகொள்ளலாம். ஒரு மாதத்திற்கு நாம் என்னென்ன விஷயங்களை வீட்டிற்காக செய்கிறோம் என்பதை ஒரு பட்டியல் போட்டு வைத்திருப்போம். அந்தப் பட்டியலில் குழந்தைகளுக்கான கல்வி, அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், இதர செலவினங்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றிற்கு நாம் எவ்வளவு பணத்தை செலவு செய்யப் போகிறோம் என்று ஒதுக்கீடு செய்து வைத்திருப்போம். அதுவே ஒரு நாட்டிற்கு என்றால் அது ஒரு மிகப்பெரிய சடங்கு போன்றது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கான பட்ஜெட் நாட்டிற்கு ஒதுக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டினை ஆண்டு தோறும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் உரையாக வாசிக்கிறார். அதற்கான தயாரிப்புப் பணி வாசிப்பதற்கு முந்தைய ஆண்டான ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தொடங்கிவிடும். அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் தங்களின் துறைகளுக்குத் தேவையான செயல்திட்ட நிதிகளைக் குறித்து நிதியமைச்சரிடம் தகவல் தெரிவிப்பார்கள். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சரவையின் குழு ஒன்று ஆகஸ்ட் 22ஆம் தேதியிலிருந்து நிதி ஒதுக்குவதற்கான செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடும். உதாரணத்திற்கு  அடுத்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை இந்த ஆண்டு ஆகஸ்டில் தயாரிக்க நிதி அமைச்சகம் முனைந்துவிடும்.

இந்தத் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் யார் என்று யாருக்கும் சொல்லப்படமாட்டாது. ஊழியர்கள் நிதி அமைச்சகத்தின் ’நார்த் போல்’ என்று சொல்லப்படும் பகுதியில் அறிக்கைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். தயாரிப்பு பணி முடியும் வரைக்கும் அவர்கள் தங்களின் வீட்டிற்கு செல்லக்கூடாது. குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி கிடையாது. உடல்நிலை மோசமாக போகும் பட்சத்தில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அப்போதுகூட விடுப்பு எடுத்தவர்களை கண்காணிக்க தனி காவலர்கள், உளவுத்துறையினர் இருப்பர். பட்ஜெட் குறித்தத் தகவல் கசிந்தால் அது தேசதுரோகமாகக் கருதப்படும். ஆகவே இத்தகு முன்னெச்செரிக்கை நடவடிக்கையினை மத்திய அரசாங்கம் செய்கிறது.

பட்ஜெட் அறிக்கையானது தயாரானதும் அதனைக் கொண்டாடும் விதமாக அல்வா செய்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் சம்பிரதாயம் நடைபெறும். இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு முன்பு இனிப்பு வழங்கப்படும். அதுபோலவேதான் இங்கு அல்வா வழங்குகிறார்கள். பட்ஜெட்டானது நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர் நிதியமைச்சரால் அறிமுகம் செய்யப்படும். பட்ஜெட்டினைப் பொறுத்தவரை அதனை பணமசோதா என்பார்கள். இந்த பணமசோதா லோக் சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும். சாதாராண மசோதாக்கள் ராஜ்ய சபா மற்றும் லோக் சபா இரண்டிலும் அறிமுகப்படுத்தலாம். பண மசோதாவைப் பொறுத்தவரை லோக் சபாவில் கொண்டு வரப்பட்டு, இரு அவைகளிலும் வாசிக்கப்படும்.  இரண்டாம் வாசிப்பு, குழு அறிக்கை, மூன்றாம் வாசிப்பு என்று இரு அவைகளிலும் வாசிக்கப்பட்டு சபா நாயகரிடம் ஒப்புதல்பெற்று, குடியரசுத் தலைவர் பார்வைக்கு செல்லும். அவர் ஒப்புதல் அளித்ததும் சட்டமாகும்.

மேலும் சாதாராண மசோதாவாக இருந்து, அது சரியில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆறுமாத காலத்திற்கு அதை நிறுத்தி வைக்கலாம் அல்லது மேற்பார்வையிட பரிசீலனை செய்யலாம். ஆனால் பணமசோதாவைப் பொறுத்தவரை பதினான்கு நாட்கள் மட்டுமே கால அவகாசம் குடியரசுத் தலைவருக்கு  வழங்கப்படும். அதற்குள் அவர் ஒப்புதல் அளிக்கவேண்டும். ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அது சட்டமாகிவிடும்.

 

Exit mobile version