சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் மிடுக்கோடும் கம்பீரத்தை பறைசாற்றும் விதமாகவும் இருக்கும் குதிரைப்படை குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
அரசர்கள் காலத்தில் போர்க்களங்களில் தவிர்க்க முடியாதது குதிரைப் படை.ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ் மதராஸ் மாகாணம் இருந்தபோது கவர்னரின் தனி பாதுகாப்புக்காக குதிரை படையை பயன்படுத்தினர்.18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மதராஸ் மாநகர கண்காணிப்பாளராக இருந்த வால்டர்கிராண்ட், 15 காவலர்களோடு 7 குதிரைகளை கொண்ட படையை நகரின் காவல் பணிக்காக பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
தற்போது சென்னை மாநகர குதிரை படையில் 34 குதிரைகள் உள்ளன.இதில் கிரேட்டர் வாரியர் என்ற குதிரையின் மாதிரியைக் கொண்டுதான் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அற்புதமான குதிரை சிலையை நிறுவினார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்ற கூடுதல் தகவல் வியப்படைய செய்கிறது.இந்த சூழலில் மெரினா கடற்கரையில் கூடும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குதிரைப் படையின் பங்கு மகத்தானது.
வோட்ஸ், கேரட், லூசரின் கீரை, இளம்புல், கொண்டைகடலை, ஆலிவ்விதை என தினசரி ஒரு குதிரைக்கு வழங்கும் உணவின் பட்டியல் நீண்டாலும், விடியற்காலை 5:30 மணிக்கே பயிற்சி துவங்கிவிடும் என்று கூறுகின்றனர் காவலர்கள்.மனிதர்களை பாதுகாப்பதற்காக நடையாய் நடக்கும் குதிரைக்கு மறவாமல் 24 நாட்களுக்கு ஒருமுறை புதிய லாடம் கட்டிவிடுகின்றனர் பணியாளர்கள்… இதனால் புத்துணர்வுடன் தன் காவல் பணியை தொடர்கிறது குதிரைப் படை…