உலக கிரிக்கெட் ரசிகர்களே ஒரு திருவிழாவாக கொண்டாடும் ஒரு கிரிக்கெட் தொடர் எது என்றால் அது இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடர்தான். இரண்டு நாடுகளின் தேசிய விளையாட்டும் கிரிக்கெட் என்பதால் போட்டிப் போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி சண்டை செய்வார்கள். அந்த அளவிற்கு ஆக்ரோசமான போட்டியாக இந்தத் தொடர் இருக்கும். இதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. இதற்கென்று ஒரு தனிக் கதையே இருக்கிறது. அது என்ன கதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!
முட்டிக்கொண்ட போர்…!
1877 ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக கிரிக்கெட் தொடரானது துவங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் முதன்முறையாக 1882 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக டெஸ்ட் போட்டி தொடங்கியது. அப்போது இந்த டெஸ்ட் போட்டிக்கு ஆஷஸ் என்கிற பெயர் கிடையாது. அந்த முதல் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது. பின் அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு பயணப்பட்டு சென்ற ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து மண்ணில் வைத்தே அந்த அணியை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி தாயகம் திரும்பியது. இந்தப் போட்டித் தொடர்தான் “ஆஷஸ்” என்கிற மிகப்பெரிய ஒரு டெஸ்ட் தொடர் உருவாக தூபம் போட்டிருக்கிறது.
ஆஷஸ் பிறந்த கதை..!
இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரெஜினால்ட் ஷெர்லி ப்ரூக்ஸ் தான் வேலை செய்த பத்திரிகையில் இங்கிலாந்தின் தோல்வி குறித்து மிகவும் நையாண்டித் தனமாக குறிப்பிட்டு எழுதியிருந்தார். ” 29 ஆகஸ்ட், 1882இல் ஓவல் மைதானத்தில் வைத்து இங்கிலிஷ் கிரிக்கெட் மறைந்துவிட்டது, அதன் உடல் தகனம் செய்யப்பட்டு அந்த சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது” என்று இரங்கல் செய்தியாக இங்கிலாந்தின் தோல்விக் குறித்து செய்தி ஒன்றினை வெளியிட்டார். இது இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இடையே பெருத்த மன வருத்தத்தை அந்நாளில் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த தோல்விக்கு பழி தீர்க்கப்படும், இங்கிலாந்தின் சாம்பலை மீண்டும் தாயகத்திற்கே கொண்டு வருவேன் என்று அன்றைய இங்கிலாந்து கேப்டன் ஐவோ ப்ளிக் கூறினார். சொன்ன சபதத்தை நிறைவேற்றியும் காட்டினார். அதே ஆண்டில் மீண்டும் ஆஸ்திரேலியா பயணப்பட்ட இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அதில் 2-1 என்ற கணக்கில் வென்று இங்கிலாந்து வெற்றி வாகை சூடியது.
கோப்பையைப் பற்றி சொல்லப்படும் கதை…!
இங்கிலாந்தின் சாம்பல் எடுத்து வரப்பட்டதால், அதன் நினைவாக டெரகோட்டாவால் செய்யப்பட்ட சிறிய பத்து செண்டிமீட்டர் அளவுள்ள கோப்பை ஐவோ ப்ளிக்-கிற்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்தக் கோப்பை உருவாக்கம் பற்றி இரு வேறு கருத்துகள் உள்ளன. அதாவது, முதலாவது ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்ட ஸ்டெம்ப்களின் பைல்ஸ்களை எரித்து உருவாக்கப்பட்டது என்றும், தொடரில் பயன்படுத்தப்பட்ட பந்தை எரித்து உருவாக்கப்பட்டது என்றும் இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
1927-ல் ஐவோ ப்ளிக் இறந்த பின்னர் அவரது மனைவி இந்த கோப்பையை முதன் முதலாக மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்திடல் ஒப்படைத்தார். ஆனால் தற்போது இந்தக் கோப்பை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ளது. இந்தக் கோப்பைக்காகத் தான் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இங்கிலாந்து அணியும் – ஆஸ்திரேலியா அணியும் மோதிக்கொள்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு இந்தக் கோப்பை தரப்படுகிறது. தற்போதைக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தான். அவர்களிடம்தான் ஆஷஷ் கோப்பையானது உள்ளது. தற்போதைய ஆஷஸ் போட்டிகள் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் லீடிங்கில் உள்ளது.
Discussion about this post