டி20யில் உலக சாதனைப் படைத்த சவுத் ஆப்ரிக்கா அணி.. 258 ரன் இலக்கை துரத்தி வெற்றி..!

சவுத் ஆப்ரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையே தற்போது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி சவுத் ஆப்ரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் இரண்டாவது டி20 ஆட்டத்தில் சவுத் ஆப்ரிக்கா அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் உலக சாதனை புரிந்துள்ளது. டாஸ் வென்ற சவுத் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி தொடக்கம் சவுத் ஆப்ரிக்காவிற்கு நன்றாகவே அமைந்தது. வெஸ்ட் இண்டீசின் ஓபனிங் பேட்ஸ்மேன் ப்ரெண்டன் கிங் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸும் ஜான்சன் சார்லஸும் சவுத் ஆப்ரிக்கா அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்தார்கள். குறிப்பாக ஜான்சன் சார்லஸ் வாகாக கிடைத்த பந்துகளை சிக்சர்களுக்கு பறக்கவிட்டார். 46 பந்துகளில் 11 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் அடித்து 118 ரன் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரிகளுடன் 51 ரன் எடுத்தார். இருவரும் யார்கோ ஜான்சன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்கள்.

பிறகு வந்த நிகோலஸ் பூரன் 2 ரன்னில் வெளியேற கேப்டன் ரோமன் பவுல் 28 ரன்கள் அடித்தார். ரோமோரியோ ஷெப்பேர்டு 18 பந்துகளில் 4 சிக்சர் 1 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். ஓடியன் ஸ்மித் 11 ரன்கள் எடுத்தார். இருபது ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக யார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும், வெயின் பார்னெல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

259 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இமாலய இலக்கை நோக்கி சவுத் ஆப்ரிக்கா அணியானது களமிறங்கியது. பந்துவீச்சில் கிடைத்த சிறப்பான தொடக்கம் பேட்டிங்கிலும் கிடைத்தது. டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தது.  டி காக் 44 பந்துகளில் 8 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடித்து 100 ரன்கள் எடுத்தார். ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 28 பந்துகளில் 11 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் எடுத்து 68 ரன்கள் குவித்திருந்தார். அடுத்து வந்த ரில்லி ரொசொவ் 16, மில்லர் 10 என்று வெளியேற கேப்டன் மார்க்ரம் 38 ரன்களும், ஹென்றி க்ளாசன் 16 ரன்களும் குவித்து 18.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தனர். இந்த சேசிங் ஆனது உலக கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன் பல்கேரியா அணி செர்பியாவிற்கு எதிராக 246 ரன்கள் சேஸ் செய்திருந்ததே அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. தற்போது அதனை சவுத் ஆப்ரிக்கா அணி முறியடித்துள்ளது. சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற டி காக்கிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Exit mobile version