கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரிய வழக்கு- உத்தரவிட உயர்நீதி மன்றம் மறுப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த கல்வியாண்டு முடிவடையும் நிலையில் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதன் மூலம் எந்த பாதிப்பும் வராது என்றும், குழந்தைகளுக்கு கொரோனா எளிதில் பரவும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் ராஜவேலு குறிப்பிட்டு இருந்தார். அப்போது, தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பள்ளிகளில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் அவர் வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட மறுப்பு தெரிவித்துவிட்டனர். மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடரும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Exit mobile version