தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை, ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து, பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தும், தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன், பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு, 3 மாத சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பார்களில் மதுபானம் அருந்திய நபர்களை பொது இடங்களில் நடமாட அனுமதிப்பது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி சரவணன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post