எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தபால் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்காதது ஏற்று கொள்ள முடியாதது எனவும், இந்தி மொழி தாய்மொழியாக அல்லாத மாநிலத்தில் தேர்வு எழுதியவர்கள் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வாதிட்டார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதாக தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்
Discussion about this post