இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்திருந்த தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சிஏஏ சட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, புதன் கிழமையன்று தலைமைச் செயலகம் மற்றும் தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாகவும், இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். இதற்கு தடை விதிக்கக் கோரி, இயக்குநரும், இந்திய மக்கள் மன்ற தலைவருமான வராகி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இஸ்லாமிய அமைப்பினர் அறிவித்துள்ள முற்றுகை போரட்டங்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மத கலவரங்களை தூண்டுதற்கான வாய்ப்பும் உள்ளதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள், காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறிவித்துள்ள சட்டவிரோத முற்றுகை போராட்டத்திற்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனு குறித்து, மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version