சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மறு உத்தரவு வரும் வரை நீதிமன்ற பணிகளை நிறுத்தி வைப்பது என உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளதாக தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நீதிபதியின் அனுமதி பெற்று தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணை நடைபெறும் இடம், நேரடி விசாரணையா அல்லது காணொலி மூலம் விசாரணையா என பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார். மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அனுமதியோடு, மிக அவசர வழக்காக இருந்தால் மட்டுமே கீழமை நீதிமன்றங்கள் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post