வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், அனுமதி வழங்குதலை துரிதப்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தால் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தநிலையில், முதலீடுகளை உறுதி செய்யும் பொருட்டும், முதலீட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்துவதற்கும், முதலமைச்சர் தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், துணை முதலமைச்சர், மின்சாரம், நகராட்சி நிர்வாகம், தொழில் துறை, வருவாய்துறை, சுற்றுச்சூழல் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள, தலைமைச் செயலாளர் மற்றும் துறைகளின் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.