சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில், சென்னை உட்பட வட மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு இன்னும் மழை பெய்யவில்லை. இந்தநிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. சுமார் 8 மணி அளவில் இடி மின்னலுடன் தொடங்கிய மழை வெளுத்து வாங்கியது. எழும்பூர், வேப்பேரி, கொடுங்கையூர், பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திரு.வி.க. நகர், அடையாறு, திருவான்மியூர் உள்பட பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோன்று, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், போரூர், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்பட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். இரவு முழுவதும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
Discussion about this post