நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த பெய்தது. திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, நெசவாளர் காலனி, கொல்லப்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கோடையின் வெப்பத்தில் சிக்கி தவித்த பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்த மழை பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வேட்டைகாரன்கோயில், வாய்க்கால்மேடு, பங்களாபுதூர், குள்ளம்பாளையம், செங்கோட்டையன்நகர், நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், ஒத்தக்குதிரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையில் நாப்பிராம்பட்டி பகுதியில் இருந்த பழைமையான புளியமரம் விழுந்ததில் அருகில் இருந்த ஓம்சக்தி கோயில் சேதமடைந்தது. மின்சாரத்தை துண்டித்து மீட்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் இருளில் மூழ்கின. ஆரணி -செய்யாறு நெடுஞ்சாலையில் புளியமரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினர்.