தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

வடகிழக்கு பருவமழை ஒருநாள் முன்கூட்டியே தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திராவில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதேபோல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாத நிலையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், சின்ன உடைப்பு, விமான நிலையம், சம்பக்குளம், சிந்தாமணி உள்ளிட்ட மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.

Exit mobile version