திண்டுக்கல் மாவட்டத்தில் திடீரென பெய்த கன மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் கிராமப்புறங்களில் இன்று பலத்த மழை பெய்தது. சாணார்பட்டி, செட்டியபட்டி, கோபால்பட்டி, ரெட்டியபட்டி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக விவசாய பணிகள் துரிதமாக நடைபெறும் என்றும் குடிநீர் பஞ்சம் தீரும் எனவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதே போல் கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து மூன்று தினங்களாக மழை பெய்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.