வடசென்னையில் தனியார் நிறுவன மேலாளர் மற்றும் அவரது நண்பர்களைக் கடுமையாகத் தாக்கிய திமுக முன்னாள் அமைச்சர் கேபிபி சாமியின் மகன் பரசு பிரபாகரன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கேபிபி சாமி. இவரது சகோதரர் கேபிபி சங்கர். இருவரும் வட சென்னையில் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில், கேபிபி சாமியின் அரசியல் அண்மைக்காலமாகச் சரிவைச் சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில், அவரது சகோதரர் கேபிபி சங்கர் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கு அரசியல் சரிவு ஏற்பட்டதை உணர்ந்த கேபிபி சாமி, தனது மகன் பரசு பிரபாகரனை திமுக இளைஞர் அணியில் புதிய பொறுப்பிற்குத் தயார் செய்து வருகிறார். திமுகவில் பொறுப்பைப் பெற அடியாட்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள பரசு பிரபாகரன் தனது உறவினரான நிர்மல் தாஸ் என்பவரைத் தன்னுடன் இணைந்து செயல்பட வருமாறு அழைத்தபோது அவர் மறுத்ததால், அவரது அலுவலக ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருந்த நிர்மல் தாசையும் உடன் இருந்த நண்பர்களையும் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிர்மல்தாஸ் தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நிர்மல் தாஸ் புகார் அளித்துள்ளார். பிரபாகரன் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவதூறாகப் பேசியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனைத் தேடி வருகின்றனர். பதவிக்காகத் தாக்குதல் நடத்துவது என்பது திமுகவிற்கு கைவந்த கலை என்று அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post