கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் 104 தொகுதிகளை பிடித்த பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க முடிவு செய்து காய்நகர்த்தி வருகிறது. இதன் ஒருகட்டமாக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.விற்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காங்கிரஸ் கூறி வருகிறது. இதே கருத்தை முதலமைச்சர் குமாரசாமியும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க. எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் குமாரசாமியே எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு அதிக அளவிலான பணம் மற்றும் அமைச்சர் பதவிகள் வழங்குவதாக வாக்களிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post